சீனிராஜ் சிவகுமார்
1
இயற்கை தயாரித்த
ஹைட்ரஜன் குண்டு நான்.
நானில்லாவிட்டால்
நீங்கள் இல்லை.
நான் கோபப்பட்டாலும்
நீங்கள் இல்லை.
சித்திரையில்
என் பொய்க்கோபம்
காதலில் பிரிவு.
மார்கழியில்
புவியுடன் என்
அமைதி உடன்படிக்கை
இதழ்களில் முத்தம்.
மழைநாட்களில்
இருட்டடிப்பு
செய்யப்படுகிறேன்.
2
என் புறஊதாக் கைகளைத்
தடுக்கும்
ஓசோன் அடுக்கு
உங்கள் பாதுகாப்பு அரண்.
பாதுகாப்பு அரணில்
ஓட்டைபோடும்
அறிவாளிகள் நீங்கள்.
3
பூமி என்
அகச்சிவப்புக்கதிர்களின்
சிறைச்சாலை.
உங்கள் புகைபோக்கிகளின்
பெருமூச்சுகளே
கைது செய்யும் திருடர்கள்.
பூமியின் காய்ச்சலுக்கு
நீங்களும் நானும் காரணம்.
4
பகலில் கிழக்கிலும்
இரவில் மேற்கிலும்
உதிக்கிறேன்.
அண்டார்க்டிகாவிலும் ஆர்க்டிக்கிலும்
ஆண்டிற்கு ஆறுமாதங்கள்
எனக்குத்
தடையுத்தரவு.
என் ஒன்பது குழந்தைகளுக்கும்
உஷ்ணப்பால் ஊட்டுகிறேன்.
கிரகம் என நீங்கள்
ஏற்க மறுக்கும்
ப்ளுட்டோ சவலைப்பிள்ளை
5
சில சமயங்களில்
உங்களைவிட மரங்களை
எனக்குப் பிடித்திருக்கிறது.
நீங்கள் கறுப்புக்குடை
விரிக்கிறீர்கள்.
அல்லது
பச்சைக்குடைகளின் கீழ்
ஒதுங்குகிறீர்கள்.
பச்சைக்குடைகள்
என் நிழலில்
நிற்கின்றன.
வெயில்
என்
நிழல்.
6
நான்
உங்கள் ஆசான்.
உலகம்
உங்கள் வகுப்பறை.
இதோ உங்களுக்கான பாடம்:
அனுபவியுங்கள் வாழ்க்கையை
துன்ப இடைச்செருகல்கள் இருந்தால் கூட.
உண்டு
என்னிலும்
இருண்ட பிரதேசங்கள்.
7
விடியலைத் தேடாதே,
நீயும் சூரியன் தான்
8
வானம் கறுத்திருந்தால்
இரவாகவோ கார்காலமாகவோ இருக்கலாம்.
கவலைப் படாதே நெஞ்சே
இரவும் மழையும்
தேவையென்பதோடு...
எழுநூறு கோடி ஆண்டுகள்
இன்னும் இருப்பான்
சூரியன்.
டிசம்பர் 2007.
குறிப்பு:
சூரியனில் இருண்ட பிரதேசங்களை Sunspots என்று அழைப்பார்கள்.
பதினோரு ஆண்டுகட்கொரு முறை எண்ணிக்கையிலும் பரப்பளவிலும் அவை மாறுவதையும் விஞ்ஞானிகளின் விழிகள் பார்த்திருக்கின்றன.