சீனிராஜ் சிவகுமார்
பகுதி 1: செவியின்பம்
குரல்களில் இருந்தும் இல்லை,
குயில்மொழி காற்றின் பிள்ளை.
விரல்களில் இருந்தும் இல்லை,
வாத்தியம் வெற்றுக் கட்டை.
ஸ்வரங்களின் வெற்றியெல்லாம்
செவிகளைத் தாண்டித் தானே.
நிறம் மணம் சேர்க்கா விட்டால்
நிஜங்களும் கசக்கும் தேனே.1
கவாலியை நிறுத்துமாறு
கட்டளையிட்ட மன்னர்
அவுரங்க சீபின் காதில்
அமிழ்திசை அபஸ்வரந்தான்.
அவர்வரும் முன்னே அக்பர்
அவையிலே தான்சேன் ராஜா.
செவிகளைப் பொறுத்துத் தானே
சங்கீத கௌரவங்கள்.2
அமைதியும் நல்லிசையே
அதைப்பெறல் மனத்தின் பேறே.
அமைதியைப் பெறுவதற்கே
அருந்தலாம் செவியால் சாறே.
விமர்சகன் கேட்கும் போது
வீணையின் விளக்கம் வேறே.
இமைகளை மூடிக் கேட்கும்
ரசிகனின் விழிநீர் ஆறே.3
கசிகிற மவுனக் கண்ணீர்
கரவொலி ஆகும், பாட்டை
இசைத்தவன் மனசை எட்டி
இருபுறச் செவிகள் பார்க்கும்.
ரசிகனின் மனசை தெய்வ
ராகமோ மீட்டிப் பார்க்கும்.
இசைபட வாழ்தல் என்றால்
இப்புதுப் பொருளே யாகும்.4
பகுதி 2: செவியின்பமும் செவித்துன்பமும்
சங்கீதம் மட்டுமல்ல.
செவிப்பயன் இன்னும் உண்டு.
தங்கிய அறிவில் முக்கால்
தந்தவை காதுகள் தாம்.
கங்குகள் அமிலச் சொற்கள்
கருக்கிய போதும் உள்ளே
பங்கமில்லாமல் இன்னும்
புதுமதி புகுத்துதம்மா.5
மண்ணிலும் கிடக்கலாமே,
மலையிலும் நடக்கலாமே,
விண்ணிலும் விடு கொட்டாவி,
விழுங்குக உணவும் சொல்லும்.
தொண்டையும் மூக்கும் காதும்
தொடுகிற வசதி உண்டு
மண்டையில் காற்றழுத்தச்
சமநிலை காப்பதற்கே.6
அவமொழி, புகழ்ப் பாமாலை
அறிவிலே மயக்கமாகும்.
செவியவை சேர்ந்தால் மண்டை
சமநிலை காப்பதுண்டா?
விவரமும் உள்ளே போகும்
வதந்தியும் நுழையப் பார்க்கும்
கவனமாய்க் காவல் செய்வோம்.
காதுகண் தகவல் வாசல். 7
குறிப்பு:
இரண்டாம் விருத்தம்: மன்னர் வரிசை: ஹ_மாயுன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப்..
ஆறாம் விருத்தம்: காது மூக்கு தொண்டையை இணைக்கும் Eustachian குழாய் இல்லாவிட்டால் உயரழுத்த சூழலில் செவிப்பறை கிழியக் கூடும்.
டிசம்பர் 2007