சீனிராஜ் சிவகுமார்
அறுசீர் விருத்தம்
பருவத்தில் மொட்டை மாடிப்
பையனின் பார்வை பட்டுப்
புருவத்தை நெறித்தேன் பாவி
புறமுதுகு காட்டி விட்டான்.
இருபத்தி நாலைத் தாண்டி
இரண்டொரு மாசம் ஆச்சு
ஒருபயல் என்முன் தோன்றி
உயிர்மடல் நீட்ட வில்லை. 1
சென்னையில் பேருந் துக்குள்
சாதனைப் பெண்ணாய் நாளும்
கன்னிநான் புகுந்து நின்றால்
கண்களோ காமம் கக்கும்.
இன்னொரு பக்கம் பார்த்தால்
இருக்கையில் எந்தன் கள்வன்.
புன்னகை செய்து பார்ப்பேன்
புரியுமா அவன்மூ ளைக்கு? 2
சத்தமாய்ப் பேசிப் பேசிச்
சாய்த்திடப் பார்க்கும் வாய்கள்
சுத்தமாய்ப் பிடிக்க வில்லை
சிரிப்பிலும் நேர்மை இல்லை
அத்தனை பேரும் மோசம்
அவனுடன் மட்டும் பாசம்
உத்தமன் விழியென் மேலே
உரசவே தவங்கி டந்தேன் 3
பேருந்து நிறுத்தம் வந்தால்
பார்க்காமல் இறங்கிப் போவான்.
ஈரைந்து நொடிகள் நானும்
இமைக்காமல் கிறங்கிச் சாவேன்.
தோரியம் யுரேனி யம்போல்
தோழிநான் மோச மில்லை.
யாரேனும் உதவி செய்தால்
எமக்குநீர் தெய்வம் ஆவீர் 4
கணிப்பொறித் திரையை விட்டுக்
கண்களை நகர்த்த மாட்டான்
தனிப்பொறி அமைத்துத் தானா
தலைவனைப் பிடிக்க வேண்டும்?
உணவினை அருந்தும் போதும்
உயர்குணம் உயிராய்க் காப்பான்.
கணைகளைத் தொடுத்துப் பார்த்தேன்
கைகழுவி விட்டுச் சென்றான். 5
தத்துவம் சினிமாப் பாடல்
தமிழ்மொழி ரசிக னாமே?
அத்தனை பேரும் சொன்னார்
அறிவிலோர் சிகர மாமே?
வித்தைகள் தெரிந்த போதும்
விழிமொழி புரிந்த போதும்
புத்தகம் மீது காதல்
புடவையைப் படிக்க மாட்டான். 6
அமைதியா திமிரா ஒன்றும்
அறிகிலேன் அவனைப் பற்றி.
சுமையென நினைக்கி றானா
சுந்தரி இல்லையா நான்?
சமநிலை மாறிச் சிந்தை
சரிவதேன் தராசைப் போல?
குமைகிறேன் சிரித்துக் கொண்டே,
கூந்தலை ஒதுக்கிக் கொண்டே. 7
ஒருகரம் தோளைப் பற்ற
ஒருகரம் முதுகைச் சுற்ற
இருவரும் இணைந்தி ருந்தோம்
ஈரிழை DNA போல்.
இரவுகள் நெருப்பின் மீது
ஈரமாய்த் தகிக்கும் போது.
மரபுகள் வாயைக் கட்ட
மனசினுள் தாகம் தீர்த்தேன். 8
இப்படி வருஷம் மூன்றும்
இகழ்ச்சியாய்க் கடந்து போக
எப்படிச் சுவாசிக்கின்றேன்
இருப்பது நிஜமா பொய்யா?
அப்பனே பிள்ளை யாரே
அட்சதைப் பிச்சை உண்டா?
ஒப்புதல் தந்திருப்பான்
ஒருமுறை கேட்டிருந்தால். 9
வலைவீசிப் பிடிக்க நண்பன்
வளைகுடா மீனும் இல்லை
கலைபேசி அவனை வீழ்த்த
கல்விமான் நானும் இல்லை.
அலைபேசி வழியே அப்பா
அனுப்பினார் செவிக்குள் தேளை.
விலைபேசி மகனை விற்க
வருகிறார் யாரோ நாளை. 10
பா எண் 4: தோரியம், யுரேனியம் பற்றிய குறிப்பு கவிதைச்சுவைக்காக மட்டுமே. அணு எண் 83க்கு மேல் கொண்ட தனிமங்கள் கதிர்வீசும் தன்மை வாய்ந்தவை என்கிற அடிப்படையை வைத்து எழுதியிருக்கிறேன். மற்றபடி இன்றைய அணு மின் உற்பத்தி முறைகள் பாதுகாப்பானவை. நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவை.
2007