சீனிராஜ் சிவகுமார்
எனக்குள் வளர்கிற எரிமலைச் சினமே
அணைந்து விடாதே ஆயிர மாயிரம்
கண்கள் உனக்காய்க் காத்திருக் கின்றன.
புண்களில் ரத்தம் பூத்து நிற்பினும்
புன்னகை எனக்குப் புரியத் தெரியும்.
வேகத் தடைகள் வேக வேகமாய்
எனது வழியில் எழும்பி மறைந்தன.
பிணக்குகள் என்னைப் பின்தொடர்ந்தாலும்
வணக்கம் சொல்லி விரட்டியடிப்பேன்.
எல்லைக் கோட்டை எட்டும் வரையில்
தொல்லை என்னைத் தொடர்ந்து வருமென
அறிந்தே இருக்கிறேன் ஆயினும் நான்
இறந்து விடவா இடர்கள் தாங்கினேன்?
06-March-1996