சீனிராஜ் சிவகுமார்
துறைமுகத்து நுழைவாயில்
தொடுவானில் கப்பல்கள்
திறந்துவிட்ட கார்மேகம்
திரைபோட்ட மழைத்தூறல்
கரைதடவும் கடலைத்தான்
காணவில்லை சட்டென்று.
தரைமீது கொதிப்பதென்ன
தணலின்றி நீர்த்துளிகள்?
-----------------------------------------------------------------
பூப்புனித நீராட்டு
பூமிக்கு நடக்கிறதோ?
பூப்பெய்தா மரங்களுக்கும்
புயல்சின்னம் பிடிக்கிறதோ?
வேப்ப மரங்களல்ல
விரிந்திருக்கும் உப்பளங்கள்.
ஏப்ரல் நெருங்கிவர
எதற்காக உறுமல்கள்?
----------------------------------------------------------------
கடலின் பெருமூச்சோ
கரைதாண்டும் மேகங்கள்?
இடிக்கும் ஒலிதானோ
எண்திக்கும் ராகங்கள்?
வெடிக்கும் எரிமலைக்குள்
வேய்ங்குழல் கீதங்கள்
படைக்கத் தெரிந்தவர் நாம்.
பேய்மழைக்கா கரைந்திருப்போம்?
காற்றழுத்தத் தாழ்வுநிலை
கடந்தவர் நாம் கடப்பவர் தாம்.
ஏற்ற இறக்கங்கள்
எம்கரைகள் பார்த்ததுண்டு.
நேற்றைய மேகங்கள்
நாளைக்கும் பொழிந்திருக்கும்
மாற்றத்தால் திருவோடும்
மகுடமெனத் தலையமரும்.
மகுடமென இன்றிருக்கும்
மறுபடியும் திருவோடே.
முகிலினமே உம்வாழ்வும்
முரசுகட்டில் வாழ்க்கைதான்.
யுகம்யுகமாய் இதுநடந்தும்
எவனிங்கே திருந்தியவன்?
சுகம்காண வதைபட்டு
சொர்க்கமிதில் வருந்தியவன்.
---------------------------------------------------------
அனல்மின் நிலையத்தின்
அடுப்புக் கரிகீழே.
புனல்மின் னொளிகூட்டிப்
போகும் கரிமேலே.
தினப்படி வாழ்க்கையில்
தேன்துளி கிடைத்தாலும்
நனையவும் நாவுக்கும்
நீர்த்துளி வேண்டுமடா
--------------------------------------------------------
போகட்டும் என்றிருக்கப்
புலவனால் முடிந்தாலும்
தேகத்தால் உழைக்கின்ற
தொழிலாளி என்செய்வான்?
மேகங்காள் மேகங்காள்
மார்ச்மாத மேகங்காள்
ஆகஸ்டில் எங்கிருந்தீர்?
அறுவடைக்கு வந்துவிட்டீர்?
கடல்நீர் அரைவாசி
கழனியில் நிரப்புகிறீர்
அடைமழைக் காலத்தில்
அளந்தெதற்கு ஊற்றுகிறீர்?
கொடையாய் எவர்கேட்டார்
கோடையில் வந்தீரே?
தடையாய் இருந்தோமா?
தைவரும் முன்னாலே?
----------------------------------------------------------
மார்ச் 21, 2008;