சீனிராஜ் சிவகுமார்
வயதுகள் கூடக் கூட
வாலிப ஏக்கம் கூடும்
நயனங்கள் மங்கும் போதும்
நாற்புறம் தீர்க்க மாகும்
வியந்துநாம் பார்க்க மாட்டோம்
விந்தைகள் பழகிப் போகும்
வயசிலே செய்த சேட்டை
வயோதிகம் மறந்து போகும்
போதனை செய்யும் நாக்கு
பூமியோ காதைப் பொத்தும்
காதலைப் போற்ற மாட்டோம்
கரன்சித்தாள் மனைவி யாகும்
மாதரை மணம்மு டிப்போர்
மடையரே என்று தோன்றும்
போதுமே என்போம் ஆனால்
புறப்பட டிக்கெட் இல்லை.
புறப்படும் நண்பர் கண்டு
பக்குவம் வந்து போகும்
கரைதனில் வாக்கிங் சென்று
காணாமல் போகத் தோன்றும்
அரைமணி சுடோகு போட
அந்தியில் தொடர்கள் பார்க்கப்
புரைநிறைக் கண்சு ருக்கிப்
புதியதோர் உயிர்சு ரப்போம்
பேரனின் கிறுக்கல் கண்டு
பிக்காஸோ தோற்றான் என்போம்
வேறெவர் கலைசெய் தாலும்
வெறும்பயல் பேதை என்போம்
யாருமே தப்ப மாட்டோம்
எதற்கடா இந்த ஆட்டம்?
காரியச் சடங்கில் வெற்றுக்
கண்களைத் துடைக்கும் கூட்டம்.
2007