சீனிராஜ் சிவகுமார்
இரசாயனத் தொழிற்சாலைப் பணியாளன் ஒருவனின் குரல்
சப்தரிஷி மண்டலத்தை ரசித்தி ருந்தேன்
சப்தங்கள் நடுவிலின்று ஊனமானேன்
நித்தமொரு கவிபடைத்து மகிழ்ந்திருந்தேன்
நீராவிச் சூட்டிலின்று கருகுகின்றேன்
முத்தமிழை மூச்சாக நினைத்திருந்தேன்
முடிவிலின்று விஷவாயு பருகுகின்றேன்
தத்துவத்தின் சாகரத்தில் நீந்திப் பார்த்தேன்
தணலடிக்க வியர்வையில் நனைந்தும் பார்த்தேன்.
பேனாவை மறந்துவிட்டேன், மொழியை அல்ல.
பேசாமல் இருந்தாலும் ஊமை அல்ல.
ஊனாகி உயிராகி உழைத்த போதும்
ஊதியத்தில் உயர்வில்லை, என்ன சொல்ல?
ஆனாலும் எனக்குள்ளே அணையவில்லை
ஆதவனின் நெருப்பொன்றும் பெரியதில்லை
வீணாகி விடமாட்டேன், ஒருநாள் என்னை
வியப்போடு பார்ப்பீர்கள், தொடுவேன் விண்ணை.
-----------எண்சீர் விருத்தம்
2003-4