சீனிராஜ் சிவகுமார்
சொந்தத் தொழில் தொடங்க உத்தேசித்த இளைஞனுக்கு மேலாண்மையியல் குரு உபதேசித்ததில் ஒரு பகுதி.
அறுசீர் விருத்தம்
ஹைட்ரஜன் தீர்ந்து விட்டால்
ஆதவன் இருண்டு போவான்.
நைட்ரஜன் தீர்ந்து விட்டால்
நற்பயிர் தழைப்ப தில்லை.
மெய்த்திறம் தன்னம் பிக்கை
மனிதரில் தீர்ந்து விட்டால்
செய்தொழில் சிதைந்து போகும்
சுவாசமும் மறந்து போகும்.
அலைகடல் அருகே உள்ள
அருமணற் துகளைப் பொன்னாய்
விலைதினம் குறைத்து விற்றால்
வாங்குமோ வளைக்க ரங்கள்?
பிலிப்கோட்லர் நூல்ப யின்று
பொருட்களைச் சந்தை சேர்த்தும்
கலியுகச் சதிகள் செய்தால்
கனவில்தான் நிரம்பும் கல்லா.
விளம்பரம் பொய்யாகாது.
விளம்பரப் பொய்கள் வேண்டாம்.
விளம்பரம் உண்மை யாயின்
உண்மையே விளம்பரம்தான்.
விளம்பரம் பொய்யே யாயின்
பொய்யதும் விளம்பரம்தான்
களத்தினில் இறங்கும் முன்பே
கணக்கிடு மெய்யும் பொய்யும்.
பொய்யெனத் தெரியா வண்ணம்
பொய்யதைக் கூறினாலும்
பொய்யெனத் தெரிந்த பின்னர்
பொதுஜனம் மகிழ்ந்திருந்தால்
பொய்யது பொய்யே இல்லை
பொய்களும் பெயர் கொடுக்கும்.
வையகம் வெறுத்தி ருந்தால்
விட்டபொய் பெயர்கெ டுக்கும்
நாக்கது தேனாய்ப் பேசி
நெஞ்சிலே தூய்மை கொண்டும்
பூக்கடை திறந்தால் கூட்டம்
புறப்பட்டு வாரா(து), ஆனால்
நாக்கிலே தேனைப் பூசி
நெஞ்சிலே நஞ்சைக் கொண்டால்
பூக்கடை திறந்தால் கூடப்
பொத்துவர் காதை மூக்கை.
எரிந்தபின் தீயணைக்க
எண்பது வீரர் வேண்டாம்.
மரித்தபின் நோயாளிக்கு
மருத்துவம் தேவையில்லை.
வரந்தரும் வாடிக்கையை
வழிபடா விட்டால் கூடக்
கருத்தினில் வைத்திருப்பாய்
காலத்தால் செய்வாய் சேவை.
நாலுபேர் மகிழ்ந்திருந்தால்
நால்வரைப் பார்த்துச் சொல்வர்.
நாலுபேர் சினந்திருந்தால்
நாற்பது பேரைப் பார்ப்பர்.
நாலுபேர் நாற்ப தாகி
நாலிரு திசைப ரப்பி
நாலுமைல் தூரத்துக்கு
நகர்ந்துபோய் வாங்கு வாரே.
2007