சீனிராஜ் சிவகுமார்
ஞாபகத்தின்
ஏதோவொரு பக்கத்தில்
பார்வை நடுகிறேன்.
பால்பற்கள் துறக்கும் வயது
அல்லது
அதற்குச் சற்று முன்பு.
அன்றைய பேல்பூரியின்
சுவையான மிச்சம்
இருக்கிறது எனக்குள்
இன்னும்.
நீருக்குள் இறங்கினான் சூரியன்.
தீப்பிடித்துக் கொண்டது
கடல்.
காலம் காலமாய்த்
தேடியது கிடைக்காமல்
திரும்பினாலும்
தேடலை
நிறுத்தவில்லை
அலை.
மகாலட்சுமி மந்திரின்
மௌனத்தைச் சுற்றி
அரட்டையடிக்கும் அலைகள் சில...
பாறைகளிலேயே விழுந்து
வணங்கித் திரும்பும்
அலைகள் சில.
நீலப்பரப்பில்
வெள்ளைக்கோலங்களாய்
வரையப்பட்டு
அழியும் சில.
நுரைக்கழிவுகள்
பாதங்களுக்கடியில்.
குறுகுறுப்பு
மனசெங்கும்.
அப்பாவின் தோள்சாய்ந்து தலைதிருப்பி
இருவிழியால் சிரிக்கும்
ஒன்றரை வயது மகாலட்சுமி.
அப்பாவின் கை பிடித்த நான்.
என் கை பிடித்தபடி அம்மா.
எவர் கையாலும்
பிடிக்கமுடியாமல்
அலைகள்.. அலைகள்...
பயந்து நான்
வியந்த இருவரை
ஒட்ட...
கடலுக்கே திரும்பும்
அலைகள்.
அப்பா அம்மாவுக்கு
பயந்து.
1982-83 காலகட்டத்து நிகழ்வைச் சொல்வது. 1995 முதல் 1998 க்குள் என்றைக்கோ எழுதியது. சில திருத்தங்களுடன் உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.